பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது குறைந்த பட்சம் 50% உள்ளூர் உள்ளீட்டைக் கொண்ட திரவப்பால் மற்றும் யோகர்ட் ஆகியவற்றிற்கு பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டார்.
இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவப் பால் மற்றும் யோகர்ட் மீதான பெறுமதி சேர் வரி (VAT) நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வணிக நோக்கங்களுக்காகப் பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நெப்தா மீதான பெறுமதி சேர் வரியும் (VAT) நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
@CM