நாட்டில், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது, கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் இரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது.
நாடு, முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (+94 703 733 933) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@CM