நலன்புரி நன்மைகள் சபை 'அஸ்வெசும' கொடுப்பனவுக்கான வருடாந்தத் தரவு புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 2023ஆம் ஆண்டு அஸ்வெசும உதவித்தொகையைப் பெற்ற அல்லது அதைப் பெறத் தகுதி பெற்றவர்கள் தங்களது தகவல்களை முதல் முறையாகப் புதுப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் அஸ்வேசுமவுக்கான குறைகள் அல்லது முறையீடுகளைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவலைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை, ஏனெனில் அவர்களின் விபரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளன.
தகவல் சரிபார்ப்பின் போது, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் பயன்பாட்டில் உள்ள தொலைபேசி இலக்கம் ஆகியன அத்தியாவசியமானது என நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்தியுள்ளது.
தகவல் புதுப்பிப்புகளை https://eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குப் பிரவேசித்து மேற்கொள்ள முடியும்.
அல்லது QR அட்டையில் உள்ள குடும்ப இலக்கத்தையும் (HH number) தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளிட்டு, தரவுச் சரிபார்ப்பு (Data Verification) மெனுவை நிறைவு செய்யலாம்.
இதனைக் கணினி மூலமாகவோ அல்லது கையடக்க தொலைபேசியின் மூலமாகவோ மேற்கொள்ள முடியும்.
அத்துடன் இந்தப் புதுப்பித்தலைப் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் பிரிவு மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாகவோ சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு புதுப்பித்தலின் முதல் கட்டத்தில் பங்கேற்பது கட்டாயமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்களது தகவல்களைப் புதுப்பிக்காத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள், அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெற தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
@CM
