இலங்கை கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இலங்கையில் 150,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் வரும் ஆண்டுகளில் எச்.ஐ.வி மற்றும் ஏனைய பாலியல் ரீதியான நோய்கள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று / எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 பேர் அதிக ஆபத்துள்ள பாலியல் நோய் நிலைமைகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், போதை மருந்துகளை செலுத்துபவர்கள், மற்றும் திருநங்கைகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் தற்போது சுமார் 6,000 பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்ந்து வருவதாக தரவுகள் கூறுகின்றன.
பெரும்பாலும் மேல் மாகாணத்திலும் காலி, கண்டி, குருநாகல், அனுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இருந்தும் அதிக தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ளதாக அறியமுடிகிறது.
2024 ஆம் ஆண்டில் 39,547 நபர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியதாகவும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கிட்டத்தட்ட 593,000 ஆணுறைகள் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 5,700 பேர் எச்.ஐ.வி உடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தாண்டு இதுவரை 10 எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகள் முதலே பாலியல் கல்வியின் அவசியத்தையும் பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வலியுறுத்தப்படுகிறது.
@CM
