அண்மைக்காலமாக உலகின் வளர்ந்த நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருக்கும் ஒஸெம்பிக் (Ozempic), மௌன்ஜரோ (Mounjaro), வேகோவி (Wegovy), போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளால், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல், 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நேரிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த எண்ணிக்கை 2 மடங்காக இருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஊசிக்குப் பலியானவர்களில் 20 வயது இளம் தலைமுறையினர் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், உண்மையில் உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு இந்த மருந்து பயனுள்ளதாகவே உள்ளது, ஆனால், இளம் வயதில் மெலிந்த தோற்றம் வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல், இந்த ஊசியைப் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக, தேசிய உடல் பருமன் கழகம் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும், ஒருவருக்கு அது தேவையில்லாத போது, அதை அவர் பயன்படுத்துகிறார் என்றால், அந்த ஊசிக்கான விதிமுறையை அவர் மீறுகிறார் என்றுதான் அர்த்தம்.
எனவே, அந்த ஊசியைச் செலுத்திக் கொண்டால், அதனால் ஏற்படும் அபாயங்களை அவர்கள்தான் சந்திக்க வேண்டும் எனவும் தேசிய உடல் பருமன் கழகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் தரவுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
சிலர், தங்களுக்கு எதுவும் நடக்காது என்று நினைத்து இந்த ஊசிகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
பிரித்தானியாவில், ஜிஎல்பி-1 ஊசிகளை செலுத்திக் கொண்ட 173 பேர் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உடல் பருமனுக்கு எதிரான போரில் மிகப்பெரிய கருவியாகக் கருதப்பட்ட இந்த ஊசிகளே தற்போது உயிர்க்கொல்லிகளாக மாறியிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதலில், இந்த ஊசிகளின் பக்கவிளைவுகளாக தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவைதான் இருந்தன. ஆனால், சிலருக்கு இது மரணத்தை விளைவிக்கும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஜிஎல்பி 1 மருந்து எடுத்துக் கொண்ட சிலருக்கு மண்ணீரலில் கல், சிறுநீரகக் கல், கணையத்தில் அழற்சி போன்றவையும் பக்கவிளைவுகளாக ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
முதலில், உடல் உறுப்புகள் செயலிழந்து பிறகு படிப்படியாக மரணத்தைத் தழுவுகிறார்களாம்.
2024ஆம் ஆண்டு ஊசி செலுத்திக் கொண்டு உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழில், பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறப்பு நேரிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உடல் உள்ளுறுப்புகளில் சீழ் பிடித்தல், கணைய பாதிப்பு போன்றவையும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கையில், ஒன்று மருந்தின் சுற்றுத்தாளில் பக்க விளைவுகளைப் பட்டியலிடுங்கள் அல்லது சந்தையிலிருந்து திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
@CM
