சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் கருத்து வெளியிடுகையில், தற்போதைய சூழலில் விலைகளை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான நெத்திலி கருவாட்டின் விலை உயர்ந்துள்ளது.
போருக்கு முன்னர் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்திலி, தற்போது 1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. உற்பத்திச் செலவு மற்றும் விநியோகச் சிக்கல்களே இந்த விலை உயர்விற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பருப்பு இறக்குமதி தடையின்றி இடம்பெற்றாலும், சில்லறை விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சில்லறை வியாபாரிகள் மேலதிக இலாபத்தை நோக்கமாகக் கொண்டு விலைகளை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
எனவே, நுகர்வோர் விவகார அதிகார சபை மொத்த விற்பனையை விட சில்லறை விற்பனை விலைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும், அங்குள்ள உள்நாட்டுப் போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் கொள்கலன்கள் (Containers) உரிய நேரத்திற்குத் திரும்பாமை போன்ற காரணங்களால் விநியோகத்தில் 2 முதல் 3 வாரங்கள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் இறக்குமதி நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலையீட்டின் கீழ் இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் (Permits) பலருக்கும் பகிர்ந்து வழங்கப்படுவதால் ஒரு சிலரின் ஏகபோக உரிமை தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், உலக நாடுகளின் போர்ச் சூழல் சீரானால் மட்டுமே விலைகளில் நிலையான தன்மையை எதிர்பார்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
@CM
