Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையில் டீசல் விலை 600 ரூபாயாக உயருமா? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


அட்வொகாட்டா (Advocata) நிறுவனத்தின் தலைவர் முர்டசா ஜெபர்ஜி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து, பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாடு, மக்களின் நுகர்வுத் திறனைக் குறைத்து பொருளாதாரச் சுருக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தில் 70 சதவீதம் மத்திய கிழக்கில் வாழும் 10 இலட்சம் தொழிலாளர்கள் மூலமே கிடைக்கின்றன.


இந்த நிலையில், போர்ச் சூழலால் அங்குள்ள தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்குக் கிடைக்கும் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, போக்குவரத்துப் பாதிப்பால் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.


குறிப்பாக, மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டினால் மருந்துப் பொருட்களின் விலைகள் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேபோன்று, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 35 சதவீதமானோர் வளைகுடா பிராந்தியங்கள் வழியாகவே வருகை தருகின்றனர்.


மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களிலும் அதன் தாக்கம் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே, இந்த நெருக்கடியான சூழலில், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க 'அஸ்வெசும' போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்றும் அட்வொகாட்டா நிறுவனத்தின் தலைவர் முர்டசா ஜெபர்ஜி தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads