வாகன இலக்கத் தகடுகளில் இருந்து மாகாணக் குறியீடுகள் நீக்கப்பட்டமை, ஒரு தோல்வியடைந்த திட்டத்தின் விளைவு என்பதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் (COPF) கூட்டத்தின் போது அதிகாரிகள் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போர்ச் சூழலின் போது, வாகனங்கள் எந்த மாகாணத்திலிருந்து வருகின்றன என்பதை காவல்துறையினர் எளிதில் அடையாளம் காணும் நோக்கில் மாகாணக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்காக 'ரேடியோ அலைவரிசை அடையாள' (RFID) தொழில்நுட்பத்துடன் கூடிய இலக்கத் தகடுகள் காவல்துறையுடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டன.
'ரேடியோ அலைவரிசை அடையாள' தொழில்நுட்பத்தை வாசிப்பதற்கான நவீன உபகரணங்கள் காவல்துறையிடம் இருக்கவில்லை. தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்தும் வசதி இல்லாததால் இத்திட்டம் செயலிழந்தது.
தற்போது நாட்டில் போர்ச் சூழல் நிலவாத காரணத்தினால், வாகனங்களை மாகாண ரீதியாக அடையாளம் காணும் நடைமுறை இனி அவசியமில்லை என காவல்துறையினர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இலக்கத் தகடுகளைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் அதிகளவு பணம் செலவிடுவதும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.
@CM
