உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் நான்காவது பொதுவான புற்றுநோயாக கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளது. ஆனால், இந்த உயிர்க்கொல்லி நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக வரலாற்றில் இருந்து நீக்கும் முதல் நாடாக மாற அவுஸ்திரேலியா தற்போது தயாராகி வருகிறது.
அவுஸ்திரேலியா இந்தப் புற்றுநோயை ஒழிக்க இரண்டு முக்கிய வழிகளைக் கையாள்கிறது
1. தடுப்பூசித் திட்டம்
2007 ஆம் ஆண்டில், 'கார்டசில்' என்ற எச்.பி.வி தடுப்பூசித் திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்திய முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும்.
இந்தத் திட்டம் 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, 2013 முதல் ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
2. மேம்பட்ட பரிசோதனை முறைகள்
2017 இல், அவுஸ்திரேலியா 'பாப் ஸ்மியர்' முறைக்கு பதிலாக மிகவும் துல்லியமான 'எச்.பி.வி' சார்ந்த பரிசோதனை முறைக்கு மாறியது. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டியது.
பெண்கள் தாமாகவே மாதிரிகளைச் சேகரிக்கும் வசதியையும் அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மருத்துவப் பரிசோதனைக்குத் தயங்கும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஒரு புற்றுநோயை முற்றிலுமாக ஒழிப்பது என்பது, ஒரு லட்சம் பேருக்கு 4 பேருக்கும் குறைவாகப் பாதிப்பு இருப்பதாகும். அவுஸ்திரேலியா இந்த இலக்கை 2035 ஆம் ஆண்டுக்குள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1982 முதல் தற்போது வரை கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது.
2021 தரவுகளின்படி, 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்தப் புற்றுநோய் பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை என்பது மிக முக்கியமான முன்னேற்றமாகும். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு லட்சம் பெண்களுக்கு 6.3 என்ற அளவில் பாதிப்பு உள்ளது.
எனினும் இந்த வெற்றிப்பயணத்தில் சில சவால்களும் உள்ளன.
அவுஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட, பழங்குடியின பெண்களிடையே இந்தப் புற்றுநோய் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகமாகவும், இறப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படும் உலகளாவிய சுகாதார நிதியுதவி குறைப்பு, அண்டை நாடுகளான வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் இந்தப் புற்றுநோயை ஒழிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருத்துவ வரலாற்றில், ஒரு வகை புற்றுநோயையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஒரு நாடு செயல்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஸ்வீடன், ருவாண்டா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளும் அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி இந்தப் போட்டியில் இணைந்துள்ளன.
கருப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதன் மூலம் பெண்களின் உயிரைக் காப்பது மட்டுமின்றி, அவர்கள் தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும் இது வழிவகை செய்யும்.
அவுஸ்திரேலியாவின் இந்த முன்மாதிரி திட்டம் உலகிற்கே ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
@CM
