Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வரி செலுத்தாதோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.


2026 ஜூன் 3 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச்சட்டத்தின்கீழ், உரிய கால அவகாசத்திற்குள் இணங்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் அல்லது வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன.


இந்தநிலையில் இணக்கமற்ற வரி செலுத்துபவர்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் வழங்கப்படும்.

அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து, குறைபாடுகளைச் சரிசெய்ய வரி செலுத்துபவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.


இந்த 30 நாட்களுக்குள் இணங்கத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும். 


நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 400,000 ரூபாய்க்கு மிகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.


இந்தச் சட்டங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை குறிவைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ஒத்துழைப்பு வழங்கும் குடிமக்களை இது பாதிக்காது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads