அண்டார்டிகாவில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து (Taylor Glacier) சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக உலக அறிவியல் சமூகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.
இரத்தம் போல காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி "இரத்த நீர்வீழ்ச்சி" (Blood Falls) என்றே அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், இந்த சிவப்பு நிறத்துக்கு காரணம் நீரில் அதிகளவில் காணப்படும் சிவப்பு நிற நுண்ணுயிரிகள் என அறிவியலாளர்கள் கருதினர். எனினும், அண்மைய ஆய்வுகள் இந்த நிகழ்வுக்கான உண்மையான காரணத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.
ஆய்வுகளின்படி, டெய்லர் பனிப்பாறையின் கீழ் சுமார் 400 மீற்றர் ஆழத்தில், சூரிய ஒளியும் காற்றும் படாத நிலையில் 1.5 மில்லியன் ஆண்டுகளாக உறைந்திருக்கும் அதிக உப்புச் சத்து கொண்ட நீரில் மிக அதிகளவு இரும்புச் சத்து காணப்படுகிறது.
இந்த உப்பு நிறைந்த நீர் பனிப்பாறையின் விரிசல்கள் வழியாக வெளியேறும் போது, அதிலுள்ள இரும்பு காற்றில் உள்ள ஒட்சிசனுடன் வினைபுரிந்து துருப்பிடிக்கும் (Rusting) செயற்பாடு ஏற்படுகிறது. இதன் விளைவாக நீர் சிவப்பு நிறமாக மாறி, இரத்தம் கொட்டுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
இதுவே டெய்லர் பனிப்பாறையில் காணப்படும் 'இரத்த நீர்வீழ்ச்சி' சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்கான உண்மையான அறிவியல் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபூர்வ இயற்கை நிகழ்வை முதன்முதலில் ஆவணப்படுத்தியவர் அவுஸ்திரேலிய அறிவியலாளர் தோமஸ் கிரிஃபித் டெய்லர் (Thomas Griffith Taylor) ஆவார்.
அவரின் நினைவாகவே அந்த பனிப்பாறைக்கு "டெய்லர் பனிப்பாறை" (Taylor Glacier) என பெயரிடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிவப்பு நிற நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்ற Blood Falls என்ற இயற்கை அதிசயமாக இன்று வரை கவனம் பெற்று வருகிறது.
@CM
