கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் நாளை (10) ஆரம்பமாகவுள்ளன.
இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டல்கள், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றினால் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்:
அதன்படி, பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் முகவரிகளுக்கும் அஞ்சல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதிப் பத்திரத்தில் பரீட்சார்த்திகள் தமது கையொப்பத்தைச் சான்றொப்பம் செய்திருப்பது கட்டாயமாகும்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு (Passport) ஆகியவற்றில் ஒன்றை தினமும் பரீட்சை மண்டபத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அடையாள அட்டை தொலைந்திருப்பின், தற்காலிக அடையாளச் சான்றாக அஞ்சல் அடையாள அட்டையில் பயன்படுத்தப்படும் அளவிலான இரு புகைப்படங்களை எடுத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் சான்றொப்பம் பெற்றுப் பயன்படுத்த முடியும்.
அனுமதிப் பத்திரம் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அதனைப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
எனினும், அதனையும் முன் குறிப்பிட்டவாறு முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM
