சீரற்ற வானிலை 15 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதியில், 943 குடும்பங்களைச் சேர்ந்த 3495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 448 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தற்போது 36 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர், 5 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரத்தினபுரியில் 688 பேரும், கம்பஹாவில் 473 பேரும், மாத்தறையில் 383 பேரும், புத்தளத்தில் 310 பேரும், கேகாலையில் 224 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
@CM
