தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை, அவை பழுத்திருக்கும் விதத்தை அவதானிப்பதன் மூலம் நுகர்வோர் அடையாளம் காண முடியும் என அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹித பிரசாந்த தெரிவித்துள்ளார்.
வணிக நோக்கங்கள் காரணமாக பழங்களை செயற்கையாகப் பழுக்க வைக்கும் நடைமுறைகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கையாக பழுக்கச் செய்யும் முறைகளில் பழங்களுக்கு புகையூட்டுதல் அல்லது குறிப்பிட்ட இலைகளைப் பயன்படுத்தி எத்திலீன் எனப்படும் இயற்கை தாவர ஹோர்மோனின் உற்பத்தியைத் தூண்டுதல் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையான எத்திலீன் செயல்முறையை விரைவுபடுத்துவது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அசிட்டிலீன் உள்ளிட்ட சில இரசாயனங்களின் பயன்பாடு தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளதாகவும், இலங்கையில் பழங்களைப் பழுக்க வைக்க கார்பைட் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை ஆரம்பகால கவலைகளில் ஒன்றாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கார்பைட்டில் நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் சேர்மங்கள் இருக்கக்கூடும் என்பதால், பழங்களைப் பழுக்க வைப்பதற்கான அதன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கையாகப் பழுக்கும் பழங்கள் பொதுவாக காம்புப் பகுதியிலிருந்து பழுக்கத் தொடங்கும் எனவும், சீரற்ற முறையில் அல்லது திட்டுத் திட்டாக பழுத்திருப்பது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் ரோஹித பிரசாந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயற்கையாகப் பழுக்கும் பழங்களில் ஊட்டச்சத்து மற்றும் சுவைத் தன்மைகள் முறையாக வளர்ச்சியடையும் நிலையில், செயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் பழங்களில் அதே தரம் காணப்படாமல் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பழங்களை கொள்வனவு செய்யும்போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பான நவீன முறைகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் வணிகர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
@CM
