அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரில், இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் அண்மையில் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக, அந்த நகரம் எதிர்வரும் 65 நாட்களுக்குத் தொடர்ச்சியான இருளைக் கொண்ட 'துருவ இரவு' (polar night) என்ற நிலையை எதிர்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர் பரோ(Barrow) என்று அழைக்கப்பட்ட இந்த சிறிய நகரம், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார் 300 மைல் தொலைவில் அலாஸ்காவின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.
இது வட அமெரிக்காவின் வடக்குப் பகுதி சமூகமாகக் கருதப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, உட்கியாக்விக்கின் அடுத்த சூரிய உதயம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி தான் நிகழவுள்ளது.
பூமி அதன் அச்சில் சாய்ந்திருப்பதன் காரணமாகவே இந்த நீண்ட கால இருள் ஏற்படுகிறது.
வடக்கு அரைக்கோளம் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் சூரியனிடமிருந்து விலகிச் செல்லும்போது, டிசம்பர் solstice (குளிர்காலச் சங்கிராந்தி) க்கு அருகில், சூரிய ஒளி வடக்கு முனையை அடைவது நின்று அதன் உச்ச நிலையை அடைகிறது.
துருவ இரவில் நிலவும் சூழல் மிகவும் கடுமையானது என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளி இல்லாததால், இந்த நகரத்தில் வசிக்கும் சுமார் 5,000 குடியிருப்பாளர்களின் அன்றாட நடவடிக்கைகளும் மாறுகின்றன.
இருப்பினும், இந்த இருள் தற்காலிகமானது.
வசந்த காலம் திரும்பும்போது, வெளிச்சமும் திரும்பும் என்று கூறப்படுகிறது.
மேலும், மே மாதத்தின் நடுப்பகுதி முதல் ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் வரை நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறும் என்றும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலப்பகுதியில் சூரியன் ஒருபோதும் மறையாது.
அது உட்கியாக்விக்கில் முடிவில்லாத பகல் பொழுதை (The midnight sun) உருவாக்கும் என்றும், இது அதன் நீண்ட, குளிர்ந்த இரவுகளுக்கு நேர்மாறானது என்றும் அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
@CM
