2027ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 19,000 ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச பராமரிப்பாளர் மாநாட்டின், எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எனும் இறுதி அமர்வில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு என்பது ஒரு தனிப்பட்ட சுமை அல்ல. அது ஒரு அரசு மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முன்பிள்ளைப்பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 'ஸ்டெப்-அப்' தொடர்பாடல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025 முதல் 2029ஆம் ஆண்டு வரை முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டுகால திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் உள்ள 'பராமரிப்பாளர்' என்பவரை வெறும் ஒரு 'உதவியாளராக' மாத்திரம் பார்க்காது சான்றிதழ் பெற்ற ஒரு தொழில் வல்லுநராக மாற்றுவதே தங்களது நோக்கம் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
@CM
