Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

புத்தாண்டில் தேங்காய் விலையில் ஏற்றம் - அரசின் அதிரடி முடிவு!


நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை (CCB) நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.


கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 - 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 - 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி கவலை வெளியிட்டுள்ளார்.


ஏலத்தில் குறைந்த விலைக்கு தேங்காய்களை வாங்கி, நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த ஆண்டு முதல், மாவட்ட ரீதியாக நேரடியாக தேங்காய்களை விற்பனை செய்ய சபை திட்டமிட்டுள்ளது.


இதன்படி, சபையினால் நிர்வகிக்கப்படும் 11 தென்னந்தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள் எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளன.


முன்னர் கொழும்பு, களுத்துறை, பத்தரமுல்ல மற்றும் மஹரகம போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விற்பனைச் சேவை போன்று, இம்முறையும் சகல மாவட்டங்களிலும் நியாயமான விலையில் தேங்காய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு நாட்டில் 2,900 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3,000 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பூச்சிகள் மற்றும் ஏனைய விலங்குகளினால் ஏற்படும் சுமார் 10 சதவீத அறுவடை இழப்பைத் தடுப்பதற்கான விசேட பாதுகாப்புத் திட்டங்களும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுனிமல் ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads