தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பிலிருந்து 160 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கமானது நாளை மாலை திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான கரையோரமாக பயணிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு மாவட்டத்திலும் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால்;, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை நிலவுவதைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள 10 வான் கதவுகளில் 4 கதவுகளை தலா ஒரு அடி வீதம் தொடர்ந்தும் திறந்து வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
@CM
