நிந்தவூரைச் சேர்ந்த மிகச்சிறந்த அரச உத்தியோகத்தரும், நேர்மைக்கும் அர்ப்பணிப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவருமான முஹைதீன் பாவா அப்துல்லாஹ் அவர்கள் இன்று (2026.02.27) தனது 60வது வயதில் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
கடந்த 35 வருடங்களாக அரச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், 1991 ஆம் ஆண்டு களுத்துறை தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் தனது முதன் முதலாகப் பணியை ஆரம்பித்தார். பின்னர் புதிய நியமனம் பெற்று , அம்பாறை தேர்தல் அலுவலகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளராக மக்கள் போற்றும் வகையில் கடமையாற்றி இன்று ஓய்வு பெறுகின்றார்.
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவரான இவர், 1981/1983 காலப்பகுதிகளில் கணிதப் பிரிவில் உயர்தரம் பயின்றவர். நிந்தவூரின் பிரபல மார்க்க அறிஞர் மௌலவி முஹைதீன் பாவா மற்றும் அவ்வா உம்மா தம்பதியினரின் அருமைப்புதல்வர் ஆவார்.
தேர்தல் காலங்களில் எவ்வித சலிப்புமின்றி, பகல் இரவு பாராது மக்கள் பணியாற்றி ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் இடாப்புத் திருத்த வேலைகளை மிகத் திறம்பட மேற்கொண்டு,தேர்தல் சம்பந்தமான எந்தவொரு தேவையாக இருந்தாலும், நிந்தவூர் மக்கள் தயக்கமின்றி அணுகும் ஒரு நிழலாகத் திகழ்ந்தார்.
அவர் ஒரு அதிகாரி என்பதைத் தாண்டி, ஆழ்ந்த மார்க்கப் பற்றும், அளவற்ற நற்பண்பும் கொண்டவர். யாரிடமும் கடிந்து கொள்ளாமல், எப்போதும் இன்முகத்துடன் வரவேற்று உதவி செய்யும் அவரது குணம் அனைவரது இதயங்களையும் வென்றது. இவரின் ஓய்வு என்பது அம்பாறை தேர்தல் அலுவலகத்திற்கும், குறிப்பாக நிந்தவூர் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகவே அமையும்.
"35 ஆண்டுகள் என்பது வெறும் காலம் மட்டுமல்ல, அது ஒரு சமுதாயத்தின் உரிமைகளை நிலைநாட்ட நீங்கள் சிந்திய வேர்வையின் சாட்சி."
நிந்தவூரின் இந்தச் சிறந்த மகனை, அவரது ஓய்வு காலத்தில்தனது குடும்பத்துடன் உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மன நிம்மதியுடனும் வாழ சிடிசன் மீடியா சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
@CM
