Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மத்திய கிழக்கு பதற்றம் - பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி உணவு விநியோகிக்க விசேட நடவடிக்கை!


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஸ்திரமாகப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சந்தையில் தட்டுப்பாடின்றி பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில், வர்த்தக சமூகம் மற்றும் இறக்குமதியாளர்களுடன் அமைச்சும் அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


"சர்வதேச நெருக்கடிகளைச் சாட்டாக வைத்து உள்நாட்டில் விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்துவதற்கு இடமளிக்க முடியாது. விலைக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும், சந்தை விநியோகத்தை சீராகப் பேணுவதன் மூலம் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்கிறோம்," என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


இலங்கையின் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்புத் தேவையின் பெரும்பகுதி இறக்குமதியையே நம்பியுள்ளது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுடனான வர்த்தக உறவுகள் வலுவாக இருப்பதால், விநியோகத் தடைகள் ஏற்பட வாய்ப்பில்லை என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.


ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீன் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், அதற்கு மாற்றாக மாலைதீவு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


உணவு விநியோகச் சங்கிலியில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஜனாதிபதியால் பல விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான குழு, விநியோக வலையமைப்பைச் சீர்செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.


மேலும், சந்தையில் நிலவும் போட்டித்தன்மையைச் சமநிலைப்படுத்தவும், குறைந்த விலையில் பொருட்களை வழங்கவும் 'லங்கா சதொச' நிறுவனம் பாரியளவில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து கையிருப்பில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


@CM

Tags

ads