2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி வீரர் சேம் கரன் (Sam Curran) விலகியுள்ளார்.
உபாதை காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷானக்க (Dasun Shanaka) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஏலத்திற்கு முந்தைய பரிமாற்றத்தின் (Trade) மூலம் ராஜஸ்தான் அணியில் இணைந்த சேம் கரன், இடுப்புப் பகுதி உபாதை (Groin issue) காரணமாக இம்முறை விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தசுன் ஷானக்க தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் (Lahore Qalandars) அணிக்காக விளையாடி வருகின்றார்.
ஐபிஎல் அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், தனது முடிவை லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியை வழிநடத்திய ஷானக்க, தற்போது சிறந்த துடுப்பாட்ட வரிசையில் உள்ளார்.
ஓமானுக்கு எதிராக 20 பந்துகளில் 50 ஓட்டங்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் விளாசி அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் வாய்ப்புக்காக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகும் இரண்டாவது வீரர் ஷானக்க ஆவார்.
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காக பிளெசிங் முசரபானி (Blessing Muzarabani) இஸ்லாமாபாத் யுனைடெட் அணியிலிருந்து விலகியிருந்தார்.
கடந்த பருவகாலத்தில் பின்னடைவைச் சந்தித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தனது முதல் போட்டியில் எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி கௌஹாத்தியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
@CM
