நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,
ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்களால் முறையான விநியோக முறையைப் பேண முடியவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த மருந்துத் தட்டுப்பாடு காரணமாக புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்கள் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைப் பெறுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில மருந்துகளைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுதல், அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட விலைகளில் மருந்துகளை இறக்குமதி செய்ய விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுதல்,அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கடுமையான மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் அதிக கட்டணம் செலுத்தி வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உரிய அதிகாரிகள் உடனடியாக இந்த நிலையைச் சரிசெய்யத் தவறினால், சுகாதார சேவைகள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
@CM
