Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையில் கடும் வெப்பத்திற்கு எப்போது முடிவு? வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்!


நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை, இம்மாதம் 15ஆம் திகதியுடன் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கையில்,


மக்கள் அனுபவித்து வரும் கடும் வெப்பமான காலநிலை மே 15ஆம் திகதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.


அதேவேளை, அந்த காலப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக மே 15ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் குளிர்ச்சியான வானிலை நிலவும் எனவும் அவர் கூறினார்.


அண்மைக் காலமாக நிலவிய அதிகப்படியான வெப்ப நிலைக்கு, காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததே முக்கிய காரணமாகும். இதனால் மனித உடலிலிருந்து வெளியேறும் வியர்வை வளிமண்டலத்தால் உறிஞ்சப்படாமல், இரவு நேரங்களிலும் கடும் புழுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மேகங்கள் குறைவாக இருந்ததால் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இருந்ததுடன், காற்றின் வேகம் குறைவாக இருந்ததும் மேகங்கள் உருவாகாமல் வறண்ட காலநிலை நீடிக்கக் காரணமாக அமைந்தது.


இதேவேளை, தற்போது சில இடங்களில் பெய்து வரும் மாலை நேர மழை, மே 8ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்றும் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.


அதிகபட்சமாக பொலன்னறுவையில் 34°C வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 33°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.


எனினும், தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த வறண்ட காலநிலைக்கு முடிவு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


@CM

Tags

ads