Type Here to Get Search Results !
Developed by Cleverbit

அஸ்வெசும கொடுப்பனவில் குழப்பம்; வறிய மக்களுக்கு புதிய சுமை!


அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்ட அறிவிப்பானது, நாட்டின் அரச நிதி முகாமைத்துவம் வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுவதாக ப்ரீ லோயர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதையே இது உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


சித்திரைப் புத்தாண்டுக்காக அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மேலதிக விசேட கொடுப்பனவின் போது, தவறுதலாக இரட்டைக் கொடுப்பனவு வழங்கப்பட்டதை நலன்புரி நன்மைகள் சபை நேற்று ஒப்புக்கொண்டிருந்தது.


ஒரு தரப்புக்கோப்பு இருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டமையே இதற்குக் காரணம் என சபையின் தலைவர் நிமல் கொத்தலாவல தெரிவித்தார்.


இது குறித்து நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள விளக்கத்தின் படி,


இந்த தவறு கண்டறியப்பட்டவுடன் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.


எனினும், அதற்கு முன்னதாகவே 49,759 பயனாளிகள் சுமார் 24 கோடியே 87 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுள்ளனர்.


தவறுதலாக வழங்கப்பட்ட இந்த மேலதிகத் தொகை, பயனாளிகளின் மே மாதத்திற்கான கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படும்.


இதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.


இருப்பினும், இந்த விளக்கத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ப்ரீ லோயர்ஸ் அமைப்பு, கிட்டத்தட்ட 5,000 இலட்சம் ரூபாய் அரச நிதி முகாமைத்துவக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு மக்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும், திறைசேரி நிதி ஒழுக்கமற்ற ஒன்றாக மாறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.


வறிய மக்கள் ஏற்கனவே அந்தப் பணத்தைச் செலவு செய்துள்ள நிலையில், இந்த மாதக் கொடுப்பனவில் முழுத் தொகையையும் அறவிடுவது அவர்களைப் போசணை மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இவ்வாறான தவறுகள் மற்றும் ஊடுருவல் மூலம் மக்களின் வரிப்பணம் ஆவியாவதைத் தடுக்க, திறைசேரியை சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் ப்ரீ லோயர்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


@CM

Tags

ads