Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் வடக்கு வீதி பகுதியில் எஸ்.டி.எப். சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!


நூருல் ஹுதா உமர் 


பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அக்கரைப்பற்று முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் வடக்கு வீதி அண்மைப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 64 கிராம் 370 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 38 கிராம் 290 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், நான்கு கைப்பேசிகள் மற்றும் 22,180 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்கரைப்பற்று விசேட அதிரடிப்படையினர் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 30 முதல் 50 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை நீதவான் நூர்தீன் முகம்மது சர்ஜூன் அவர்கள் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நிந்தவூர் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.


பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமந்த டி சில்வா அவர்களின் ஆலோசனையின் பேரில், அம்பாறை–மட்டக்களப்பு வலய கட்டளை அதிகாரி மற்றும் மொணராகலை பதில் பொலிஸ் அத்தியட்சகர் கேசர ரத்னவீர அவர்களின் மேற்பார்வையில், பிராந்திய கட்டளை அதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அபேசேகர அவர்களின் வழிநடத்தலில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று விசேட அதிரடிப்படை முகாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் குமார உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


@CM 

Tags

ads