Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்வித்துறையில் பாரிய மாற்றம்; இந்த ஆண்டில் 30,000 புதிய ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை!


நாட்டின் வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆசிரியர் நியமனத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விசேட நியமனத் திட்டத்தின் கீழ் கல்வித் துறையின் பல்வேறு பிரிவுகளுக்குப் புதியவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். 


அதன்படி, 23,000 பட்டதாரிகளும், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 6,100 ஆசிரியர்களும்,கல்விக்கான பிரத்தியேகப் பட்டங்களை (B.Ed) முடித்த பட்டதாரிகளும் இதில் உள்வாங்கப்படுவர்.


மேலும், கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களை படிப்படியாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மாத்திரம் கல்வித் துறை மேம்பாட்டிற்குப் போதுமானதாக அமையாது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆசிரியர்களின் முறையான பரவலாக்கம் , கல்வி நிர்வாகம் மற்றும் தரவு முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே அனைத்து முயற்சிகளும் திசைதிருப்பப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


@CM

Tags

ads