Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வடக்கு,கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை!


நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதோடு, கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.


 குறிப்பாக, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை கல்வியின் தரத்தைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 


அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விப் பணியாளர்களின் பற்றாக்குறை, தேசிய கல்வி நிறுவனத்தைப் பலப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையில் தர உறுதிப்பாட்டு வேலைத்திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.


அத்துடன், பாடசாலை நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.


@CM

Tags

ads