நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் செயலிழப்பு – அடுத்த சில நாட்களிலும் மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!
திடீர் மின் தடை காரணமாகச் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த சில நாட்களிலும் மின்சார உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் முழுமையாகச் செயலிழந்தன.
எனினும், நேற்று இரவு நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டிருக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று கூறினார்.
இருப்பினும், நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த மின் தடையால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.
@CM
