இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கையடக்கத் தொலைபேசிகளை நாள்தோறும் 2 மணிநேரம் பார்ப்பதாக நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது, பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட இரு மடங்கு அதிகம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் காலம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது நாடு முழுவதும் 2,857 குழந்தைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தநிலையில், ஒவ்வொரு குழந்தையும் நாள்தோறும், 2.22 மணி நேரம் கையடக்கத் தொலைபேசி திரைகளை பார்ப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்தியக் குழந்தைகள் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களால், குழந்தைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பைவிட இது இரு மடங்கு அதிகம் என்று, குறித்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கையடக்கத் தொலைபேசியைப் பார்க்கும் நேரத்தைப் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நிர்ணயித்துள்ள சூழலில், அது தினமும் 1.23 மணி நேரமாக இருப்பது கவலையை அதிகரித்துள்ளதாக, ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களைப் பார்ப்பதால் குழந்தைகளின் மொழித்திறன், அறிவாற்றல், சமூக நடத்தை போன்றவை பாதிக்கப்படுகின்றன.
அத்துடன், உடல் பருமனும் அதிகரிப்பதாக ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், உணவு உண்ணும்போது, கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்று சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்கவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
@CM