சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம் டிசம்பரில் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், டிசம்பர் 4 ஆம் திகதி முதல் அவர்களின் கணக்குகள் செயலிழக்கத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 10 ஆம் திகதி முதல் டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் த்ரெட்களைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு அவர்களின் கணக்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 3 நிறுவனங்களையும் சொந்தமாகக் கொண்ட மெட்டா, 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பும் பயனர்களுக்கு குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் செயலியில் உள்ள செய்திகள் மூலம் இந்த தகவல்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) கடந்த இருவாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
@CM
