மியன்மாரில் இதுவரை நிபா வைரஸ் (Nipah virus) பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்காணிப்புப் பணிகளை அந்நாட்டு சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி இது தொடர்பான விசேட சுகாதார ஆலோசனைகளையும் இன்று வெளியிட்டுள்ளது.
நிபா வைரஸைப் பரப்பும் முக்கிய காரணியான பழம் தின்னும் வௌவால்கள் மியன்மாரில் அதிகளவில் காணப்படுகின்றன.
நிபா வைரஸ் பாதிப்பு அடிக்கடி பதிவாகும் நாடுகளுடன் மியன்மார் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், வைரஸ் ஊடுருவும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகின்றது.
இந்தியாவின் மேற்கு வங்கம் உள்ளிட்ட நிபா வைரஸ் பரவல் உள்ள பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள், அவசர தேவையின்றி வைத்தியசாலைகளுக்கோ அல்லது நோயாளிகள் அதிகம் உள்ள இடங்களுக்கோ செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் அல்லது மயக்க நிலை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக விமான நிலைய சுகாதாரப் பிரிவிடமோ அல்லது எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ தெரிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பிய 14 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய உறவினர்களுக்கு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது உங்கள் பகுதியில் பன்றிகள் மற்றும் வௌவால்கள் அசாதாரணமான முறையில் உயிரிழந்தாலோ, தாமதிக்காமல் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
@CM
