ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போன்ற காட்சி தோன்றியமை உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளிகளை ரஷ்ய ஊடகமான RT மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஊடகமான Nexta TV என்பன பகிர்ந்துள்ளன.
இந்த நிகழ்வு 'பாராசெலீன்' அல்லது 'மூன் டோக்' (Moon Dog) என்று அழைக்கப்படும் ஓர் அரிய வளிமண்டல ஒளியியல் நிகழ்வு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள பனிப் படிகங்கள் (Ice Crystals) வழியாக நிலவொளி ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் ஒளிச்சிதறல் காரணமாக இந்த மாயத்தோற்றம் உருவாகிறது.
உண்மையான நிலவின் இருபுறமும் பிரகாசமான நிலவு போன்ற ஒளிப்புள்ளிகள் தோன்றுவதை இது குறிக்கும். அப்பகுதியின் கடும் குளிர்கால காலநிலையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு குறித்து எக்ஸ் (X) தளத்தின் 'Grok' செயற்கை நுண்ணறிவு உதவியாளரிடம் பயனாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு Grok வழங்கிய முரணான பதில்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ஒரு பதிலில், இது பெப்ரவரி முதலாம் திகதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நிகழ்ந்த உண்மையான 'பாராசெலீன்' நிகழ்வுதான் என Grok உறுதிப்படுத்தியது.
மற்றுமொரு பதிலில், இது 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள்களின் தொடர் வரிசையாக இருக்கலாம் எனவும், காணொளியில் நிலவுகள் தோன்றும் விதம் பாராசெலீன் நிகழ்வுக்குப் பொருந்தவில்லை என்றும் குறிப்பிட்டது.
இதற்கிடையில், சமூக வலைத்தளப் பயனாளர் ஒருவர் உண்மையான பாராசெலீன் நிகழ்வு எப்படி இருக்கும் என்பதற்கான படத்தைப் பகிர்ந்து, தற்போது வைரலாகும் காணொளி "போலியானது" (Fake) எனவும் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது ஒரு வளிமண்டல ஒளியியல் விளைவு மட்டுமே என்றும், இதனால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
@CM
