இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, அந்நாட்டு வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்டகாலமாக அமுலிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டன.
இதன் விளைவாக, பல ஆண்டுகளாக தேங்கியிருந்த வாகனங்களுக்கான கேள்வி (Pent-up demand) மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக இறக்குமதி செலவு சடுதியாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான மொத்த இறக்குமதி செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் இறக்குமதியில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்பட்டது.
வரலாற்று ரீதியாக ஒப்பிடுகையில் இது மூன்றாவது பெரிய தொகையாகும்.
2015 : 2.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (முதலிடம்)
2018 : 2.09 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இரண்டாமிடம்)
2025 : 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மூன்றாமிடம்)
நீண்டகாலத் தடைக்குப் பின்னர் ஏற்படக்கூடிய கேள்வி அதிகரிப்பினால் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வரி மற்றும் வரி அல்லாத பல கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
இருப்பினும், இந்தத் தடைகளையும் மீறி 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
@CM
