Type Here to Get Search Results !
Developed by Cleverbit

தட்டம்மை பரவல் அச்சுறுத்தல் - தடுப்பூசி தொடர்பாக சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!


நாட்டில் தட்டம்மை (Measles) நோயற்ற நிலையைத் தக்கவைப்பதில் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


குடும்ப சுகாதாரப் பணியகம் (FHB) அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.


இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவர் அத்துல லியனபத்திரண கருத்துத் தெரிவிக்கையில்:


இந்தத் தொற்றானது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதே தவிர, 2023 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய தட்டம்மை பரவலுடன் தொடர்புடையது அல்ல.


ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட இருவரும் தட்டம்மைக்கான (MMR) தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


தற்போது நாட்டில் தடுப்பூசி குறித்து நிலவும் தவறான மனப்பாங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் காரணமாகவே இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக வைத்தியர் லியனபத்திரண சுட்டிக்காட்டினார்.


குறிப்பாக முகநூல் போன்ற தளங்களில் பரப்பப்படும் போலித் தகவல்களால் பெற்றோர் தடுப்பூசியைத் தவிர்க்கின்றனர்.


சிங்கள மொழியில் தடுப்பூசி மற்றும் சாதாரண ஊசி மருந்துகளுக்கு ஒரே பதம் பயன்படுத்தப்படுவது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.


இதேவேளை 20 முதல் 34 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, வைரஸ் பரவுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது தடுப்பூசி போட முடியாத 9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்தாக அமையும்.


தடுப்பூசி பெறத் தயங்கும் குடும்பங்களுக்கு விசேட குழுக்கள் மூலம் தெளிவூட்டல்கள் வழங்கப்படுகின்றன.


காய்ச்சல் மற்றும் தடிப்பு அறிகுறிகளுடன் வரும் நோயாளர்களை உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்க தனியார் மற்றும் பொது மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


நாட்டில் தடுப்பூசிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் 6 மாதங்களுக்கும், மாவட்ட மட்டத்தில் 3 மாதங்களுக்கும் தேவையான மேலதிக கையிருப்புகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடுப்பூசி என்பது ஒரு தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பொறுப்பு என்பதை உணர்ந்து பெற்றோர் செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


@CM

Tags

ads