பசுபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பெறுமதிமிக்க கனிமப் படிவங்களை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், கிங்டாவோ கடல்சார் புவியியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்தக் கனிமப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கடலடித் தரையில் காணப்படும் விரிசல்கள் வழியாக கனிமங்கள் நிறைந்த அதிக வெப்பநிலையுடைய திரவங்கள் மேல்நோக்கி கசியும் வெப்பநீர்மப் (Hydrothermal) பகுதியில் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வெப்பநீர்ம சல்பைடு படிவு, மூன்று பெரிய கூம்பு வடிவ கனிம அமைப்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், 315 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையுடைய திரவங்களைக் கொண்ட பல உயர் வெப்பநிலை நீராவித் துவாரங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
மேலும், தரைவழிக் கனிமப் படிவங்களுடன் ஒப்பிடுகையில், இப்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் சராசரி செறிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, ஒரு அமெரிக்க ஷார்ட் டன் தாதுவில் தங்கத்தின் செறிவு 0.45 ட்ராய் அவுன்ஸ் வரையிலும், வெள்ளியின் செறிவு 36.3 ட்ராய் அவுன்ஸ் வரையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த வெப்பநீர்மப் பகுதியில் இறால், நண்டுகள் மற்றும் சிப்பிகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் செழித்து வளர்வதையும் ஆய்வுக் குழுவினர் அவதானித்துள்ளனர்.
இந்தக் கனிமப் படிவங்கள் சீனாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள், மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பின் வளைவுப் படுகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆழ்கடலில் நிலவும் கடுமையான அழுத்தம், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால், இப்பகுதியில் உடனடியாக சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலை தற்போது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பெறுமதிமிக்க கனிம வளங்கள் கண்டறியப்பட்டுள்ளமை, இந்த ஆழ்கடல் பகுதியை எதிர்காலத்தில் முக்கியமான பொருளாதார வளப் பகுதியாக மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@CM
